வெள்ளைக்கொடிகளுடன் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது? உண்மையை கூறிவிட்டு கோட்டாபய தேர்தலில் நிற்கட்டும்!

120shares

இறுதி யுத்தத்தின் போது சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை பகிரங்கமாக தெரிவித்துவிட்டு கோட்டாபய தேர்தலில் போட்டியிடட்டும் என வன்னி மாவட்ட எம்.பி. சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், ஒரு இனம் இன்னொரு இனத்தால் படுகொலை செய்யப்பட்ட நாள் மே 18.

அத்தனை விடயங்களும் நடந்த போது இராணுவத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த ஒருவர் அதற்கான பொறுப்புக் கூறலை முதலில் தெரியப்படுத்த வேண்டும்.

அங்கு வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.

குடும்ப உறுப்பினர்களுடன் பாலகுமாரன், யோகி மற்றும் கவிஞர் ஒருவரும் சரணடைந்திருக்கின்றார்கள்.

வெளிப்படையாக அவர்களின் குடும்பங்கள் முன்னிலையிலேயே அவர்கள் சரணடைந்துள்ளார்கள்.

நூற்றுக்கணக்கானோர் ஒரு கிறிஸ்தவ மதகுருவுடன் சேர்ந்து சரணடைந்தார்கள்.

எனவே அவ்வாறு சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்தி விட்டு கோட்டாபய வாக்குக் கேட்டு தேர்தலில் நிற்க வேண்டும் என்றார்.