இலங்கையில் வைத்தியதுறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கிடைக்கவுள்ள வரபிரசாதம்!

26shares

இலங்கையில் வைத்தியத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அரைசொகுசு உத்தியோக பூர்வ தங்குமிடங்களைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதற்கான திட்டம் 3 கட்டங்களில் நடைமுறைப் படுத்தப்படும். சுகாதாரத்துறையை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பாராட்டி உலக சுகாதார அமைப்பு 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

இந்தத் துறையை மேலும் மேம்படுத்துவதற்காக மீண்டும் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நாடு முழுவதிலும் 846 சுவதிவி என்ற நலன்புரி மத்திய நிலையங்கள் மூலம் 906 சுவநாரிவ் மத்திய நிலையங்களும் செயற்பட்டு வருகின்றன. இந்த மத்திய நிலையங்கள் மூலம் சரீரம் தொடர்பான ஸ்கான் காட்சிகளையும் இரத்த அழுத்தம், இரத்தத்தில் சீனியின் அளவு கொழுப்பு மற்றும் நைட்ரொக்சின் ஆகியவற்றைப் பரிசோதித்துக் கொள்ள முடியும்.

இதன் மூலம் பல நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். இருப்பினும் இதனை 30 சதவீதமானோரே பயன்படுத்துவதாக அமைச்சர் குறிப்பிட்டார். திடீர் விபத்துப் பிரிவுகளை நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலையில் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து நோயாளர்களுக்கும் தேவையான மருந்து வகைகளை நோயாளர்களுக்கு வழங்குவதற்கான நடைமுறையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மருந்துத் தட்டுப்பாடு, மருந்து வகைகள் காலங் கடந்ததாக இருப்பதைத் தடுப்பதற்கான மென்பொருள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சில சந்தர்ப்பங்களில் மருந்து வகைகளை உரிய வகைகளில் வழங்க முடியாது போகும் பட்சத்தில் அவற்றைக் கொள்வனவு செய்வதற்காக வைத்தியசாலைப் பணிப்பாளர்களுக்கு 10 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. தேசிய வைத்தியசாலைக்கென 50 மில்லியன் ரூபா வழங்கப்பட்டிருப்பதாகவும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.