வாக்காளர் இடாப்பில் மோசடியாக பெயரை பதிந்தாரா கோட்டா? இன்று எடுக்கப்படுகிறது முக்கிய முடிவு!

21shares

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடு குறித்து ஆணைக்குழு இன்று ஆராயவுள்ளது.

கோட்டாபய ராஜபக்‌ஷவின் கடவுச்சீட்டின் உண்மைத் தன்மை மற்றும் இலங்கை பிரஜாவுரிமை குறித்து ஆணைக்குழு ஆராயவுள்ளது. 2003ஆம் ஆண்டே அமெரிக்காவுக்கான பிரஜாவுரிமையைப் பெற்றுக் கொண்ட கோட்டாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட ராஜபக்‌ஷ குடும்பத்தினரின் பெயர் 2005ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் பதிவுசெய்யப்பட்டமை குறித்து பத்திரிகையொன்றின் பிரதி ஆசிரியர் லசந்த ருஹூனுகே தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார்.

முல்கிரியாகல தேர்தல் தொகுதியில் வீரகெட்டிய, மெதமுலன பிரதேசத்தில் 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் கோட்டாபய ராஜபக்‌ஷ, இயோமா ராஜபக்‌ஷ, டட்லி பியசிறி ராஜபக்ஷ, பசில் ரோஹன ராஜபக்‌ஷ ஆகியோரின் பெயர்கள் பதிவுசெய்யப்பட்டிருந்ததாகவும், இவர்கள் ஏற்கனவே அமெரிக்காவின் பிரஜாவுரிமை பெற்றிருந்த நிலையில் எவ்வாறு வாக்காளர் இடாப்பில் அவர்களுடைய பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது என்று விசாரிக்க வேண்டும் என அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், குறித்த வீட்டின் தலைவருக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என்றும் வாக்களிக்க உரிமை இல்லாத ஒருவர் வாக்களித்திருந்தால் அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த முறைப்பாட்டில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான முறைப்பாடொன்று தமக்குக் கிடைத்திருப்பதாகவும் தேர்தல்கள் ஆணையாளருக்கு இது தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டிருப்பதுடன், இன்று இது பற்றி ஆராயப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.