அந்நிய தேசம் வரை கோட்டாபயவை பிரபலமாக்கிய வெள்ளைவான் (white van)!

81shares

ஆங்கிலத்தில் வெள்ளை வான் (White van) கடத்தல் என்பது ஒரு சொற்பதமாகவே ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அந்த அளவிற்கு வெள்ளை வான் விடயம் பிரபலமாகியுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று கலாச்சார மத்திய நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தலைமையில் அன்னம் சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அமெரிக்காவிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டவர் தான் கோட்டாபய ராஜபக்ச. அவர் பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்படும் போது இலங்கை பிரஜை கூட இல்லை.

தான் ஒரு இலங்கைப் பிரஜை என்று ஒரு ஆவணத்தை சமர்ப்பித்திருக்கிறார். அந்த ஆவணம் போலியானது என்று குற்றப்புலனாய்வு துறையினர் நீதவான் நீதிமன்றுக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.

தொடர்ந்து இரட்டை பிரஜாவுரிமையுடையவராக இருந்து வந்த கோட்டபாய ராஜபக்ச சனாதிபதி ஆசை வந்த பின்னர் அமெரிக்க பிரஜாவுரிமையை துறப்பதாக ஆவணம் ஒன்றை காட்டினார். நேற்று முந்தினம் மூன்றாவது காலாண்டுக்கு உரிய அமெரிக்க பிரஜாவுரிமையை துறந்தவர்களுக்கான பெயர் பட்டியல் வெளியானது இதில் அவர் பெயர் இடம்பெறவில்லை.

இதில் பிரதானமாக இரண்டு கேள்விகள் எழுகின்றன. ஒன்று, கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை பிரஜாவுரிமையை சரியாகப் பெற்றுக்கொண்டாரா? இரண்டாவது, அமெரிக்க பிரஜாவுரிமை உண்மையிலேயே துறந்தாரா? எனவும் கேள்வியெழுகின்றது.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலகட்டத்தில் தான் போர் உச்சகட்டத்தில் நடந்தது. இதுவரை போரை நடத்தி யுத்த வெற்றி பெற்று தந்தது தான் என்று ஒரு புத்தகமே எழுதப்பட்டிருக்கிறது. இதுநாள் வரைக்கும் தனக்கு கிடைத்த புகழ் என்று மார்தட்டியவர். சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோர் எங்கே என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஏன் என்னிடம் கேட்கிறீர்கள் இராணுவத் தளபதியிடம் கேளுங்கள் என்று சொல்லியிருக்கிறார். சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோர் எங்கே என்ற கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறியதை நாம் பார்த்தோம்.

போர் காலத்தில் எவ்வாறான அட்டூழியங்கள் நடந்தது என்பது எங்களுக்கு தெரியும். என்ன விதமாக போரை வழி நடத்தினார்கள் என்பதை எங்களது மக்கள் நன்கறிவார்கள். போர் முடிந்த பின்பு என்னவிதமான அடக்கு முறைகளை கையாண்டார்கள், ஊடக சுதந்திரத்தை எவ்வாறு மழுங்கடித்தாகள் தனக்கெதிராக யாராவது ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் அவரை என்ன விதமாக கவனித்துக் கொண்டார்கள் என்பது எங்களுக்கு தெரிந்த விடயம்.

இந்த முறை அவை தொடர்பான விடயங்கள் கூடுதலாக வெளிவருகின்றது. வெள்ளை வான் கடத்தல் என்பது ஒரு சொற்பதமாகவே மாறி இருக்கிறது. உலகத்திலே அவை பேசும் பொருளாகவே உள்ளது. ஆங்கிலத்தில் வெள்ளை வான் கடத்தல் என்பது ஒரு சொற்பதமாகவே ஏற்றுக் (White van) கொள்ளப்பட்டிருக்கிறது. அந்த அளவிற்கு வெள்ளை வான் விடயம் பிரபலமாகியுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் தான் காணி அபகரிப்பு, இளைஞர்கள் துன்புறுத்தப்பட்டமை குறித்து ஒரு ஆவணம் இருக்கிறது.

தமிழ் மக்கள் குறித்து கோத்தபாய ராஜபக்ச தேர்தல் வரைபில் எதுவும் குறிப்பிடவில்லை. இந்த நாட்டில் தமிழ் தேசிய பிரச்சனை ஒன்று இருப்பதாக கூட அவர் காட்டிக்கொள்ளவில்லை. அதற்கு ஒரு படி மேலாக சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாமல் வெற்றி பெற்று காட்டுவேன் எனக் குறிப்பிட்டார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் கோட்டாபாய ராஜபக்ஷ முடிந்தால் வெற்றி பெற்று காட்டுங்கள் என சவால் விடுத்து இருக்கிறார்.

தமிழ்தேசிய மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று நிதானித்து கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களிக்க முடியாது என முடிவைச் சொல்லி இருக்கிறது.

புதிய சனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாச எதிர் வேட்பாளரை போல அட்டூழியங்கள் அடக்குமுறைகள் செய்த வரலாறு கிடையாது மாறாக நிர்க்கதியான மக்களுக்கு உறைவிடங்களை அமைத்துக் கொடுத்தவர்.

ஒரு தேர்தல் வரைபிலே தமிழ் தேசிய பிரச்சினைக்கான தீர்வு அதி உச்ச அதிகாரப் பகிர்வு பற்றி குறிப்பிட்டிருக்கிறார். இவை எல்லாம் நடக்கும் நடக்காது தெரியாது என சொல்லுகிற துணிச்சல் இவரிடம் இருக்கிறது. கோட்டாபாய ராஜபக்ஷவிற்கு இதைச் சொல்வதற்குக் கூட மனம் வரவில்லை.

ஒருசிலர் சொல்லித் தருகிறார்கள் தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவருக்கு வாக்களித்தால் கோட்டாபாய ராஜபக்ஷ வெற்றி பெறுவார். நீங்கள் வாக்களிக்காமல் புறக்கணிப்பு செய்வீர்களானால் அப்போதும் கோட்டாபய ராஜபக்சே வெற்றி பெறுவார். கோட்டாபய ராஜபக்ஷ தோல்வி அடைய வேண்டுமெனில் தமிழ் மக்கள் அன்னம் சின்னத்தில் போட்டியிடும் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க