திருமணத்துக்கு சில நிமிடங்களுக்கு முன் பிரீகிளாம்சியாவால் பாதிக்கப்பட்டு வலிப்பு ஏற்பட்ட கர்ப்பிணி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சோக சம்பவம் பிரேசிலில் நாட்டில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது.,
சா பாலோவில் 30 வயதான ஜெஸ்ஸிகா கியூடெஸ் 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். தனது காதலனை மணம் முடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் அவர் தேவாலயம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
பிரீகிலாம்ஸியாவால் பாதிக்கப்பட்ட அவர், திடீரென பின் கழுத்து வலி ஏற்பட்டதையடுத்து வலிப்பு ஏற்பட்டு மயங்கினார்.
தனது காதலியை கைபிடிக்க தேவாலயத்தில் காத்திருந்த ஃபிலேவியோ கான்கல்வெஸ் அவர் வர தாமதமானதை எண்ணி கவலை பட்டுக்கொண்டிருந்தார்.
பின், கார் வந்ததும் நடந்ததை அறிந்து அதிர்ந்தார். மயங்கிக் கிடந்த ஜெஸ்ஸிகாவுக்கு முதலுதவி செய்தார்.
அவரை, மருத்துவமனையில் சேர்த்த நிலையில் மூளையில் உள் ரத்தக் கசிவு ஏற்பட்டு, மூளைச்சாவு அடைந்தது கண்டறியப்பட்டது.
வயிற்றில் இருந்த பெண் குழந்தை அவசர அவசரமாக அறுவை சிகிச்சை மூலம் மீட்கப்பட்டது. 6 மாத கருவாக இருந்தபோதே பிறந்துவிட்டதால் பச்சிளங்குழந்தைக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.